13.2.09

நான் கடவுளா? சாத்தானா?

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீதும், உடல் ஊனமுற்றவர்கள் மீதும் சமூகத்தின் பார்வை திரும்பி வரும் நிலையில் மேற்கண்டவர்களின் வாழ்வை கதைக் களனாகக் கொண்ட “நான் கடவுள்” திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த சேது, நந்தா, பிதாமகன் ஆகிய படங்களும்கூட பிறழ்மனநிலை கொண்டவர்களை முக்கிய பாத்திரங்களாக கொண்டவர்களாகவே இருந்தது. இந்த மூன்று படங்களிலும் பாலா முன்வைத்த கருத்துகள் அனைத்தும் மிகவும் பிற்போக்குத்தனமானவையே. பொதுக்கருத்தில் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று கருதப்பட வேண்டியவர்களை அவர்களின் மரணம் காரணமாக புனிதப்படுத்தும் காரியத்தையே பாலா திட்டமிட்டோ - திட்டமிடாமலோ செய்து வந்தார், அமீர் பருத்திவீரனில் சற்று வித்தியாசமாக செய்ததுபோல. ஆனால் இந்த பரிமாணங்கள் உரியமுறையில் அலசப்படாமலே இந்த படங்களுக்கான விமர்சனங்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்தன. பிரபல இயக்குனர்களின் படங்களையோ – வெற்றிகரமாக ஓடும் படங்களையோ நமது இதழ்கள் எப்போதுமே உண்மையான விமர்சனம் செய்வதில்லை. பதிலாக அந்தப்படங்களின் புகழ்பாடும் கருத்துகளையே விமர்சனம் என்ற பெயரில் பிரசுரம் செய்கின்றன.

நான் கடவுள் படம் பாலாவின் மற்றப்படங்களில் இருந்து சற்றே வேறுபட்டது. சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் கதைநாயகனாக இருக்கும் பாத்திரம் போக்கிரிகளாகவோ – பொறுக்கிகளாகவோ இருப்பர். நான் கடவுளின் நாயகனோ போதைப்பொருட்களின் உதவியுடன், எரியும் பிணங்களின் நடுவே தன்னையே கடவுளாக உணர்ந்தவன்.

தன்னைப் பெற்றவரின் விருப்பத்திற்கிணங்க – குருவின் கட்டளைக்கிணங்க காசி நகரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள மலைக்கோவில் என்ற இடத்திற்கு வருகிறான். சராசரி மானிட குணத்திலிருந்து பெருமளவில் விலகி கஞ்சா மூலமாக கடவுளை காண்பதில் திருப்தி அடையும் அவன், பெற்றவர்களை கேவலப்படுத்துவதன் மூலம் “நானே கடவுள்” என்பதை பெற்றவர்களுக்கும் உணர்த்துகிறான்.
இதற்கிடையில் அந்த மலைக்கோவிலில் ஏராளமான உடல் - உள்ளம் ஊனமுற்றவர்களை வைத்து பிச்சை எடுக்கும் “தொழிலதிபர்” முக்கிய பாத்திரமாக அறிமுகமாகிறார். அவரது குரூர மனதை உணரவைக்கும் காட்சிகளும் திரையில் வருகிறது. பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊனமுற்ற மனிதர்களை உருப்படிகள் என்ற பெயரில் வணிகம் செய்யும் அந்த தொழிலதிபர் உருப்படிகளை வாங்குவதையும், விற்பதையும், கடத்துவதையும் தொழிலாக கொண்டிருக்கிறார். “நான் கடவுள்” என்று கூறும் கதை நாயகன், மலைக்கோவில் பகுதிக்கு வந்தபின்னும்கூட அந்த தொழில் எந்த தொந்தரவும் இல்லாமல் நடக்கிறது.

கண்பார்வையற்ற கதை நாயகி, இந்த படத்தின் எதிர்நாயகனிடம் சிக்கி அல்லல்படுவதை இயல்பாக ஏற்கிறாள். ஆனால் இதேபோல வேறொரு பிச்சையெடுக்கும் தொழிலதிபரின் வாழ்க்கைத்துணையாக போவதற்கு மறுக்கிறாள். இதிலிருந்து தன்னை காக்குமாறு கிறித்துவ தேவாலயம் ஒன்றின் பெண்துறவியிடம் மன்றாடுகிறாள். ஆனால் இந்த மன்றாடுதலும் பயனளிக்காத நிலையில் “நான் கடவுள்” எனக்கூறும் நாயகனிடம் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை வைக்கிறாள்.

இந்து மதத்தின் அகோரை எனப்படும் பிரிவை சேர்ந்த கதைநாயகனுக்கு அவனது குரு கூறும் முக்கியமான உபதேசம்: வாழ முடியாதவர்களுக்கு நீ தரும் மரணம்: மோட்சம் – பாவிகளுக்கு நீ தரும் மரணம்: தண்டனை! இந்த உபதேசத்தின்படி எதிர்நாயகனுக்கு தண்டனை மரணத்தையும், கதை நாயகிக்கு மோட்ச மரணத்தையும் வழங்கும் கதைநாயகன் காசியில் இருக்கும் குருவை நோக்கி பயணிக்க படம் முடிவடைகிறது.

இந்தப்படம் என்ன கருத்தை முன்வைக்கிறது என்று கேள்வி எழுப்பினால் எந்த கருத்தையும் முன் வைப்பது எங்கள் நோக்கமில்லை என்று இயக்குனர் பாலாவும், வசனமெழுதிய ஜெயமோகனும் பதில் அளிக்கக்கூடும். ஆனால் இந்தப்படம் என்ன பாதிப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

அண்மையில் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனரிலும் பிச்சை எடுக்கும் தொழிலதிபர்களின் கதை வருகிறது – சமூக விமர்சனமாக. அந்த சமூக அவலத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் படமாக ஸ்லம்டாக் மில்லியனர் இருக்கிறது. ஆனால் நான் கடவுள் படமோ இத்தகைய விமர்சனங்கள் ஏதுமின்றி – அது கடவுள் கொடுத்த வாழ்வு (நாத்திகம் பேசுதல் உட்பட) – என்ற அளவில் இருக்கிறது. படத்தில் காட்டப்படும் பிச்சைத் தொழில் அதிபர்கள் உடல் - உள்ளம் ஊனமுற்றவர்களை வைத்து காசு சம்பாதிக்கிறார். பாலாவோ அவர்களோடு பிச்சைத் தொழில் அதிபர்களையும் “உருப்படி” ஆக்கி காசு சம்பாதிக்க முனைகிறார். எந்த விமர்சனமும் இன்றி ஒரு சமூக அவலத்தை காட்டுவதை இப்படித்தான் விமர்சிக்க முடியும்.


மேலும் இவ்வாறு இன்னல்படுபவர்களுக்கு பாலா காட்டும் தீர்வோ கருணை மிகுந்தது. ‘நான் கடவுள்’ நாயகனிடம் தண்டனிட்டு பிரார்த்தித்து மரணத்தை பரிசாக பெற்றுக் கொள்ளலாம். வறுமையை ஒழிக்க வறுமையில் இருப்பவர்களை ஒழித்துவிட திட்டமிட்டு காரியமாற்றும் சிதம்பரம் வகையறா அரசியல்வாதிகளின் அரசியலின் மற்றொரு பரிமாணமாக பாலாவின் இந்தப் படமும் இருக்கிறது.

இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கத்தைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும் நிறைவளிப்பதாக தொழில் நுட்ப விற்பன்னர்கள் கூறக்கூடும். குறிப்பாக நடிப்பு, இசை, படத்தொகுப்பு போன்றவற்றுக்காக இந்தப்படம் புகழப்படலாம். ஆனால் இந்த அம்சங்கள் படத்தின் பார்வையாளனை உணர்வு ரீதியாக பாதிப்பதில்லை. கதையும், திரைக்கதையும், இயக்கமுமே பார்வையாளனை தீவிரமாக பாதிக்கும் இயல்பு வாய்ந்தவை.

பாலாவின் இந்தப்படத்தைவிட எஸ்.ஜே. சூர்யாவோ, சிலம்பரசனோ, ஷங்கரோ எடுக்கும் படங்கள் சமூகத்தை சிறிதளவே கெடுக்கும்.

12.2.09

ஆனந்த "விகடன் தாத்தா" ஆரம்பிக்கும் பலான பத்திரிகை!

லீவுல மாமா ஊருக்குப் போயிருந்தான் சின்னப்பயல் சித்தண்ணா! அவனோட மாமா பையன் கொஞ்சம் முத்துன கட்டை. இவனையும் கூட்டிகிட்டு ஒரு நைட் கிளப்புக்கு போனான். அங்கே டான்ஸ் ஆடின லேடிஸ் திடீர்னு ஒவ்வொரு டிரஸ்ஸா கழட்டி, கடைசியா பிறந்த மேனிக்கு நிக்கவும்.... சித்தண்ணா அலறிகிட்டே அந்த நைட் கிளப்பைவிட்டு வெளியே ஓட ஆரம்பிச்சான். பின்னாடியே துரத்தி வந்து மடக்கின மாமா பையன், “என்னாடா ஆச்சு?”னு கேட்டான். சித்தண்ணா, “பொம்பளைங்க பிறந்த மேனியா இருக்கிறதைப் பார்க்கவே கூடாதுன்னு எங்க அப்பா-அம்மா சொல்லியிருக்காங்கடா! அப்படிப் பார்த்தா நம்ம உடம்பு கல்லா மாறிப்போயிடுமாம்!” அப்படின்னு சொல்ல... மாமா பையன் விழுந்து, விழுந்து சிரிச்சுக்கிட்டே, “உங்க அப்பாம்மா சக்கையா ஏமாத்தியிருக்காங்கடா” என்றான். சித்தண்ணனோ, “கிடையாதுடா. அவங்க உண்மைதான் சொல்லியிருக்காங்க. இப்பவே என் உடம்புல கொஞ்சம் கல்லா மாற ஆரம்பிச்சுடுச்சு!” என்றானாம்.


---


வாசகர்களின் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொள்ளும் பத்திரிகைகளில் ஆனந்த விகடன் தமிழ் வார இதழ்களில் நம்பர் 1. ஆன்மீகம், இலக்கியம், அரசியல் என்று ஆரம்பித்த இந்த பத்திரிகையின் போக்கில் அறிவியல், வணிகம், வேளாண்மை, புலனாய்வு என்று புத்தம் புதிய அம்சங்கள் அவ்வப்போது அறிமுகமாவது வழக்கமானதுதான். அதன்மூலம் தனியான வாசக தளம் ஒன்றினை உருவாக்கி, பின்னர் அந்த வாசக தளத்தையே இலக்காக கொண்டு தனியான இதழ்களை (உ-ம். ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், சுட்டி விகடன், மோட்டார் விகடன்) கொண்டுவருவது விகடனின் சாமர்த்தியம். எவ்வகையிலாவது பொதுமக்களிடம் படிக்கும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்திவிட்டு, அதன்பின் நல்ல தரமான எழுத்துகளை அறிமுகப்படுத்தும் விகடனின் பாணி மிகவும் போற்றுதலுக்குரியது. இந்தப்பணியோ காலத்தின் கட்டாயம்!
மேற்கண்ட புத்தகங்களை வாங்கும் வாசகர்கள் பதின்ம வயதை கடந்தவர்களாகவோ, அல்லது குழந்தைகளாகவோ இருப்பதால், பதின்ம வயதினரை தன்வயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விகடன் தாத்தா. இதற்காகத்தான் அண்மையில் விகடன் இதழ்களில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கவர்ச்சி கன்னிகளின் படங்கள் இடம் பெறுகின்றன. மேலும் இளமை காம்பவுண்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பகுதி, ரொமான்ஸ் ரூம் – கடலை கம்னாட்டி - மன்னிக்கவும் - கம்யூனிட்டி போன்ற பெயர்களில் தொடர்ந்து வருகின்றன. ஆனாலும் தமிழகத்தின் பதின்ம வயதினர் போதிய பக்குவம் பெறுவதில் பெரும் தேக்க நிலை இருப்பதால் அதனை சமாளிக்க “விகடன் தாத்தா” வயாக்ரா விற்பனையிலும் இறங்கிவிட்டார். பெயரை சற்று மாற்றி வயாக்ரா தாத்தா சொன்ன விபரீதக்கதைகள் என்ற பெயரில் பிரசுரம் செய்யப்படுகிறது. அதில் ஒரு சாம்பிள்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது (ஆனந்தவிகடன் 11-02-09 தேதியிட்ட இதழ்).


இதெல்லாம் எதற்கு? என்று கேட்கிறீர்களா! காமசூத்திரம் படைத்த நாட்டின் இளைஞர்கள் பாலியல் குறித்த அறிவின்றி இருக்கலாமா. அதற்காக ஆரம்பித்த “அறிந்தும், அறியாமலும்” தொடர் தெரிந்தோ, தெரியாமலோ முடிந்துவிட்டது. அடுத்து சகோதரப்பத்திரிகைகளின் பாணியில் நடிகனின் கதையோ, நடிகையின் கதையோ வெளியிட்டால் மேலும் அதிக பதின்ம வயதினரை மட்டும் அல்லாமல் வாலிப-வயோதிக அன்பர்களையும் கவரலாம்.

உலகப்பொருளாதாரம் தற்போது உதை வாங்கியுள்ள நிலையில் தமிழ்கூறும் நல்லுலகின் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திருமணவாழ்வு என்பது கட்டுப்படியாகாமல் போய்விடக்கூடும். எனவே அந்த இளைஞர்களின் பாலியல் தேவையை ஈடு செய்ய விகடன் மாமா – மன்னிக்கவும் – தாத்தா இளைஞர்களுக்காக விரைவில் “டேட்டிங் பத்திரிகை” ஆரம்பிக்க உள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் முன்னோட்டமாகவே “வயாக்ரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்” என்ற புதிய பகுதியை விகடன் தாத்தாவே சிறப்பு கவனத்துடன் கொண்டுவருகிறார். இதைத் தொடர்ந்து விரைவில் தமிழக இளைஞர்களின் அனைத்து பாலியல் தாபங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் விரைவில் புதிய பத்திரிகை வெளிவரவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

காலக் கண்ணாடி - அறிமுகம்

கண்ணாடிகளில் பலவகை உண்டு.

பெரிதாக்கி, சிறிதாக்கி காட்டும் கண்ணாடிகள் உண்டு.

இடவலம் மாற்றிக்காட்டும் கண்ணாடிகள் உண்டு.

நிறம் மாற்றும் கண்ணாடிகள் உண்டு.

அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடிகள் உண்டு.

ஆனால் உள்ளே உள்ளதை உணர்த்தும் கண்ணாடிகள் உண்டா?

இதோ, காலக்கண்ணாடி.