13.2.09

நான் கடவுளா? சாத்தானா?

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீதும், உடல் ஊனமுற்றவர்கள் மீதும் சமூகத்தின் பார்வை திரும்பி வரும் நிலையில் மேற்கண்டவர்களின் வாழ்வை கதைக் களனாகக் கொண்ட “நான் கடவுள்” திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த சேது, நந்தா, பிதாமகன் ஆகிய படங்களும்கூட பிறழ்மனநிலை கொண்டவர்களை முக்கிய பாத்திரங்களாக கொண்டவர்களாகவே இருந்தது. இந்த மூன்று படங்களிலும் பாலா முன்வைத்த கருத்துகள் அனைத்தும் மிகவும் பிற்போக்குத்தனமானவையே. பொதுக்கருத்தில் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று கருதப்பட வேண்டியவர்களை அவர்களின் மரணம் காரணமாக புனிதப்படுத்தும் காரியத்தையே பாலா திட்டமிட்டோ - திட்டமிடாமலோ செய்து வந்தார், அமீர் பருத்திவீரனில் சற்று வித்தியாசமாக செய்ததுபோல. ஆனால் இந்த பரிமாணங்கள் உரியமுறையில் அலசப்படாமலே இந்த படங்களுக்கான விமர்சனங்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்தன. பிரபல இயக்குனர்களின் படங்களையோ – வெற்றிகரமாக ஓடும் படங்களையோ நமது இதழ்கள் எப்போதுமே உண்மையான விமர்சனம் செய்வதில்லை. பதிலாக அந்தப்படங்களின் புகழ்பாடும் கருத்துகளையே விமர்சனம் என்ற பெயரில் பிரசுரம் செய்கின்றன.

நான் கடவுள் படம் பாலாவின் மற்றப்படங்களில் இருந்து சற்றே வேறுபட்டது. சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் கதைநாயகனாக இருக்கும் பாத்திரம் போக்கிரிகளாகவோ – பொறுக்கிகளாகவோ இருப்பர். நான் கடவுளின் நாயகனோ போதைப்பொருட்களின் உதவியுடன், எரியும் பிணங்களின் நடுவே தன்னையே கடவுளாக உணர்ந்தவன்.

தன்னைப் பெற்றவரின் விருப்பத்திற்கிணங்க – குருவின் கட்டளைக்கிணங்க காசி நகரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள மலைக்கோவில் என்ற இடத்திற்கு வருகிறான். சராசரி மானிட குணத்திலிருந்து பெருமளவில் விலகி கஞ்சா மூலமாக கடவுளை காண்பதில் திருப்தி அடையும் அவன், பெற்றவர்களை கேவலப்படுத்துவதன் மூலம் “நானே கடவுள்” என்பதை பெற்றவர்களுக்கும் உணர்த்துகிறான்.
இதற்கிடையில் அந்த மலைக்கோவிலில் ஏராளமான உடல் - உள்ளம் ஊனமுற்றவர்களை வைத்து பிச்சை எடுக்கும் “தொழிலதிபர்” முக்கிய பாத்திரமாக அறிமுகமாகிறார். அவரது குரூர மனதை உணரவைக்கும் காட்சிகளும் திரையில் வருகிறது. பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊனமுற்ற மனிதர்களை உருப்படிகள் என்ற பெயரில் வணிகம் செய்யும் அந்த தொழிலதிபர் உருப்படிகளை வாங்குவதையும், விற்பதையும், கடத்துவதையும் தொழிலாக கொண்டிருக்கிறார். “நான் கடவுள்” என்று கூறும் கதை நாயகன், மலைக்கோவில் பகுதிக்கு வந்தபின்னும்கூட அந்த தொழில் எந்த தொந்தரவும் இல்லாமல் நடக்கிறது.

கண்பார்வையற்ற கதை நாயகி, இந்த படத்தின் எதிர்நாயகனிடம் சிக்கி அல்லல்படுவதை இயல்பாக ஏற்கிறாள். ஆனால் இதேபோல வேறொரு பிச்சையெடுக்கும் தொழிலதிபரின் வாழ்க்கைத்துணையாக போவதற்கு மறுக்கிறாள். இதிலிருந்து தன்னை காக்குமாறு கிறித்துவ தேவாலயம் ஒன்றின் பெண்துறவியிடம் மன்றாடுகிறாள். ஆனால் இந்த மன்றாடுதலும் பயனளிக்காத நிலையில் “நான் கடவுள்” எனக்கூறும் நாயகனிடம் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை வைக்கிறாள்.

இந்து மதத்தின் அகோரை எனப்படும் பிரிவை சேர்ந்த கதைநாயகனுக்கு அவனது குரு கூறும் முக்கியமான உபதேசம்: வாழ முடியாதவர்களுக்கு நீ தரும் மரணம்: மோட்சம் – பாவிகளுக்கு நீ தரும் மரணம்: தண்டனை! இந்த உபதேசத்தின்படி எதிர்நாயகனுக்கு தண்டனை மரணத்தையும், கதை நாயகிக்கு மோட்ச மரணத்தையும் வழங்கும் கதைநாயகன் காசியில் இருக்கும் குருவை நோக்கி பயணிக்க படம் முடிவடைகிறது.

இந்தப்படம் என்ன கருத்தை முன்வைக்கிறது என்று கேள்வி எழுப்பினால் எந்த கருத்தையும் முன் வைப்பது எங்கள் நோக்கமில்லை என்று இயக்குனர் பாலாவும், வசனமெழுதிய ஜெயமோகனும் பதில் அளிக்கக்கூடும். ஆனால் இந்தப்படம் என்ன பாதிப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

அண்மையில் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனரிலும் பிச்சை எடுக்கும் தொழிலதிபர்களின் கதை வருகிறது – சமூக விமர்சனமாக. அந்த சமூக அவலத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் படமாக ஸ்லம்டாக் மில்லியனர் இருக்கிறது. ஆனால் நான் கடவுள் படமோ இத்தகைய விமர்சனங்கள் ஏதுமின்றி – அது கடவுள் கொடுத்த வாழ்வு (நாத்திகம் பேசுதல் உட்பட) – என்ற அளவில் இருக்கிறது. படத்தில் காட்டப்படும் பிச்சைத் தொழில் அதிபர்கள் உடல் - உள்ளம் ஊனமுற்றவர்களை வைத்து காசு சம்பாதிக்கிறார். பாலாவோ அவர்களோடு பிச்சைத் தொழில் அதிபர்களையும் “உருப்படி” ஆக்கி காசு சம்பாதிக்க முனைகிறார். எந்த விமர்சனமும் இன்றி ஒரு சமூக அவலத்தை காட்டுவதை இப்படித்தான் விமர்சிக்க முடியும்.


மேலும் இவ்வாறு இன்னல்படுபவர்களுக்கு பாலா காட்டும் தீர்வோ கருணை மிகுந்தது. ‘நான் கடவுள்’ நாயகனிடம் தண்டனிட்டு பிரார்த்தித்து மரணத்தை பரிசாக பெற்றுக் கொள்ளலாம். வறுமையை ஒழிக்க வறுமையில் இருப்பவர்களை ஒழித்துவிட திட்டமிட்டு காரியமாற்றும் சிதம்பரம் வகையறா அரசியல்வாதிகளின் அரசியலின் மற்றொரு பரிமாணமாக பாலாவின் இந்தப் படமும் இருக்கிறது.

இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கத்தைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும் நிறைவளிப்பதாக தொழில் நுட்ப விற்பன்னர்கள் கூறக்கூடும். குறிப்பாக நடிப்பு, இசை, படத்தொகுப்பு போன்றவற்றுக்காக இந்தப்படம் புகழப்படலாம். ஆனால் இந்த அம்சங்கள் படத்தின் பார்வையாளனை உணர்வு ரீதியாக பாதிப்பதில்லை. கதையும், திரைக்கதையும், இயக்கமுமே பார்வையாளனை தீவிரமாக பாதிக்கும் இயல்பு வாய்ந்தவை.

பாலாவின் இந்தப்படத்தைவிட எஸ்.ஜே. சூர்யாவோ, சிலம்பரசனோ, ஷங்கரோ எடுக்கும் படங்கள் சமூகத்தை சிறிதளவே கெடுக்கும்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஊர்சுற்றி சொன்னது…

// “நான் கடவுள்” என்று கூறும் கதை நாயகன், மலைக்கோவில் பகுதிக்கு வந்தபின்னும்கூட அந்த தொழில் எந்த தொந்தரவும் இல்லாமல் நடக்கிறது//

ஏற்கெனவே அங்கு குடிகொண்டிருந்த கடவுளர்களெல்லாம் என்ன ஆனார்கள்?

//ஆனால் நான் கடவுள் படமோ இத்தகைய விமர்சனங்கள் ஏதுமின்றி//

படத்தை இன்னுமொரு முறை பாருங்கள். 'கடவுளை நம்பி இந்த அவலங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்' என்பதுதான் இப்படத்தின் விமர்சனமே. ஆழமான விமர்சனம் எதுவென்றால், 'இத்தகு அவலங்களை கண்டுகொள்ளாத கடவுளையும் கண்டுகொள்ளாதீர்கள்' என்பதே.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கருத்துரையிடுக